ஆதார சிந்தனைகள்
ஆரோக்கியம் என்ற சொல்லின் விரிவான பொருள் உடல் நலத்தையும் மன நலத்தையும் உள்ளடக்குகிறது .
ஆரோக்கியம் என்பதன் இந்த பொருளை ஏற்றுக் கொண்டாலும் நடைமுறையில் நாம் அனைவரும் உடல் நலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
பெரும்பாலும் மன நலத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து கொள்ளாததே முக்கிய காரணம் ஆகும்.
அதனால் மக்கள் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் மனநல ஆலோசகர்களையும் மனநல மருத்துவர்களையும் அணுகுவதை தாமதப்படுத்துகிறார்கள்.
இருந்த போதிலும் தற்போது மனநலக் கோளாறுகளை பற்றிய நிறைய விழிப்புணர்வு நமது மக்களிடையே பெருகி வருகிறது.
மனநலப் பிரச்சினைகள் ஒரு சிலருக்குத்தான் இருக்கும் என்பது அல்ல. இது எல்லா வயதினருக்கும் வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலாவது சந்திக்க வேண்டிவரும்.
குழந்தைகள், பள்ளிக்கு செல்பவர்கள், இளைஞர்கள் ,பெரியவர்கள் முதியோர்கள், தாய்மார்கள், பெற்றோர்கள் என ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் சில மனநல ஆலோசனைகள் தேவைப்படும். நம்முடைய மாறிய வாழ்க்கை சூழ்நிலைகளால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.
சவால்களுக்கு பயந்தும் தகுந்த உதவி பெறுவதில் தயக்கம் காட்டுவதாலேயும் நிறைய பேர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாமல் இருக்கிறார்கள்.
மன நலத்தைப் பற்றிய தேவையான தெளிவான போதுமான அறிவு இல்லாததாலும் மேலும் பயம், வெட்கம், தயக்கம் தவறான புரிதல்கள் ஆகிய காரணங்களாலும் தகுந்த ஆலோசனைகள் பெறாமல் இருக்கிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் எப்படி அடிப்படை உரிமைகளை கேட்பதில் தயக்கம் காட்டக் கூடாதோ அதே போல மன நலத்தையும் காக்க தெளிவான அறிவு பெறுவதிலும் உதவி கோருவதிலும் தயக்கம் காட்ட தேவையில்லை.
அமைதியான மனம்,சமச்சீரான மனநிலை, தெளிவான எண்ணங்கள் நம்மை நம்முடைய இலக்குகளை நோக்கி இட்டுச் செல்லும் என்பது தெளிவு. மேலும் அமைதியான மேம்பட்ட வாழ்வும் நமக்கு உறுதி.
வரும் புதுவருடத்தில் நாம் நம் முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் தேவையான அவசியமான மாறுதல்களை மேற்கொள்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
ஜெ. சாதனா
மனநல ஆலோசகர்
